Monday, July 23, 2012

நாராதீய புராண சங்கைத் தெளிவு

ஆல்காட் , ஜான் ரத்தினம் இருவருடைய தோழமையினால் பண்டிதரின் சிந்தனை விசாலமடைந்தது .தமிழின பூர்வக்குடிகள் ஏன் தீண்டத்தகாதவர்களாக ஆனார்கள் ? என்ற தேடுதலால் ஊருஊராயி சுற்றித்திருந்தார். அப்போதுதான் "நாராதீய சங்கைத் தெளிவு " எனும் ஓலைச்சுவடி கிடைத்தது. அதில் பவுத்தர்கள் எப்படி தீண்டத்தகாதவர்களாக ஆனார்கள் என்பதையும் சாதி பேத விவரங்களையும் விவரித்திருந்தது. அதன் 570 பாக்களையும் படித்துவிட்டு , தன் நெடிய ஆராய்ச்சியின் விளைவாக பவுத்தத்தின் அடிப்படையை தாம் வந்தடைந்ததாக பண்டிதர் குறிப்பிடுகிறார்.
நீலகிரியில் ஏற்கனவே ஒடுக்கப்பட்டோரை ஒருங்கிணைத்து "திராவிட மகாஜன சபை " யை 1890 இல் துவக்கி நடத்தினார் . திராவிட மகாஜன சபையின் சார்பாக ஒரு மாநாட்டை ௦01-12-1891 இல் ஊட்டியில் நடத்தினார்
இதில் பல தீர்மானங்கள் நிறைவேற்றி காங்கிரஸ் செயலாளருக்கும் பிரிட்டிஷ் அரசுக்கும் அனுப்பட்டது.
அத்தீர்மானங்கள்:
பறையர் எனக் கூறுவது அவதூறு, குற்றம் என சட்டம் இயற்றவேண்டும்
கல்வி வசதி வேண்டும்
கல்வி உதவித் தொகை அளிக்கவேண்டும்
கல்வி கற்றவர்களுக்கு அரசு வேலை
உள்ளாட்சி அமைப்புகளில் பிரதிநிதித்துவம்
பொது இடங்களில் நுழைய உரிமை
அரசு அலுவலகங்களில் நுழைய அனுமதி
கிராம முன்சீப் பதவி
கிராம புறம்போக்கு தரிசு நிலங்கள் வழங்கவேண்டும்
சிறைச்சாலை சட்டம் 464 பிரிவை நீக்குதல்
1892 ஏப்ரல் மாதம் சென்னை விக்டோரியா அரங்கில் நடைபெற்ற சென்னை மகாஜன சபை மாநாட்டில், நீலகிரி பிரதிநிதியாக பண்டிதர் கலந்துகொண்டார் .இம்மாநாட்டில்தான் ஒடுக்கப்பட்டோருக்கு இலவச கல்வி ,புறம்போக்கு தரிசு நிலம், வேலைவாய்ப்பு போன்ற கோரிக்கைகளை முன்வைத்தார். இறைவனை வழிபட கோவிலுக்குள் நுழைய அனுமதி கேட்டபோது, அரங்கத்தில் உள்ள அனைவரும் எழந்து நின்று " அந்த பறையனை வெளியே துரத்துங்கள் " என சத்தம் போட்டார்கள் . பண்டிதருக்கு ஒரே அதிர்ச்சி. நாங்கள் இந்துக்கள் தானே ஏன் கோவிலுக்குள் நுழைய அனுமதி மறுக்கிறீர்கள் என திரும்பத்திரும்ப கோபமாக கேட்டார். "உங்களுக்குத்தான் முனியாண்டி, காளியாத்தா , மாரியாத்தா இருக்க்கே அதை கும்பிடுங்கோ " என்று சொல்லி பண்டிதரை மாநாட்டைவிட்டு விரட்டிவிட்டனர். பண்டிதர் கடும் கோபத்தோடு ஊர் திரும்பினார்

தமிழன் 102 ஆண்டுகள்







பத்தொன்பதாம் நூற்றாண்டின் கடைசியில் தொல்தமிழர்கள் சாதியற்ற திராவிடர்கள் உரிமைகளைப் பற்றி பேசி, வேத பிராமணீயத்தை எதிர்த்து, சாதி ஒழிப்பு, சுயமரியாதை , பகுத்தறிவு, பிரதிநிதித்துவம் போன்ற நவீன கருத்தாக்கங்களை உருவாகியண்டிதர் . அயோத்திதாசரின் தமிழன் இதழ், 102 ஆண்டுகள் நிறைவு பெற்றுள்ளது.
சென்னை இரயப்பெட்டையிலிருந்து புதன் தோறும் 19.06.1907 முதல் நான்கு பக்கங்களுடன் அன்றைய காலணா விலையில் "ஒரு பைசாத் தமிழன்"என்று தனித்துவமாய் பெயர் சூட்டப்பட்டு வெளிவந்தது. இந்த இதழ் யாருக்காக வெளிவருகிறது எனவும் விளக்குகிறார். " உயர் நிலையும், இடைநிலையும் ,கடை நிலையும் பாகுபடுத்தி அறிய முடியாத மக்களுக்கு நீதி , சரியான பாதை , நேர்மை ஆகியவற்றை கற்பிப்பதற்காக, சில தத்துவவாதிகளும் இயற்கை விஞ்ஞானிகளும் , கணிதவியலாளரும் இலக்கியவாதிகளும் பலரும் ஒன்று கூடி இப்பத்திரிக்கையை வெளியிட்டிருக்கிறோம். தமிழ் மனம் பரவ விரும்பும் தமிழர் ஒவ்வொருவரும் கையொப்பம் வைத்திதனை யாதரிக்க கோருகிறோம் ." என அறிவிக்கிறார்.



இதழின் முகப்பில் "ஒரு பைசாத் தமிழன்" என்று இதழின் பெயரை புத்த குறியீட்டு வடிவமான ஒன்பது தாமரை இதழ்களின் மீது எழுதி அதன் இடப்புறம் 'ஜெ து ' என்றும் வலப்புறம் 'மங்களம்' என்றும் எழுதியும் நடுவில் நன்மைக்கடைபிடி என எழுதி இரு புறமும் மலர் கொத்து என அழகுணர்வோடு மிக நேர்த்தியாக தன் இதழின் சின்னத்தை வடிவமைத்திருக்கிறார்.
முதல் இதழில் கடவுள் வாழ்த்து , அரசர் வாழ்த்து ,தமிழ் வாழ்த்து,
பூர்வத் தமிழொளி (அரசியல் தொடர்) வர்த்தமானங்கள் (நாட்டு நடப்புச்செய்திகள் ) சித்த மருத்துவ குறிப்புகள் இடம்பெற்றன.
ஓராண்டுக்குப் பிறகு வாசகர்களின் வேண்டுகோளுக்கிணங்க " அச்சுக் கூடமும் பத்திரிகைப் பெயரும் மாறுதல் அடைந்தது" 26.08 .1908என விளக்கமளித்து "ஒரு பைசா" நீக்கப்பெற்றது. பெண்கள் கல்வி, வேலை வாய்ப்பு , வானிலை அறிக்கைகள், வாசகர் கடிதம் , அயல் நாட்டு செய்திகள் , விளம்பரம், நூல் விமர்சனங்கள் போன்றவை பிரசுரமாயின
தமிழகர்கள் அதிகம் வாழும் கர்நாடக, கோலார் தங்க வயல் , பர்மா தென்னாப்பிரிக்கா சிங்கப்பூர் போன்ற நாடுகளில் தமிழன் இதழ் பரவியது.
இந்து மதத்தில் காணப்படும் மூடநம்பிக்கைகளை மிக கடுமையாக விமர்சித்தது.

தமிழகத்தில் எந்த இயக்கமும் தோன்றாத காலத்தில்
வேத மத , பிராமணீய எதிர்ப்பு , சாதி ஒழிப்பு , தமிழ் மொழியுணர்வு , பகுத்தறிவு சமுக நீதி பிரதிநித்துவம் ,தலித் விடுதலை ,சுயமரியாதை இந்தி எதிர்ப்பு பெண் விடுதலை போன்ற கருத்துகளை உரையாடல் செய்து பல இயக்கங்களுக்கு ஒரு முழுமையான அரசியல் கருத்துத் தொகுப்பை வழங்கிய தமிழன் இதழ் குறித்து யாரும் பேச தயக்கப்படுகிரர்கள்
இதழியலும் அரசியலிலும் நவீனம் குறித்த கருத்தாக்கங்கள் தமிழன் இதழிலிருந்தே துவக்கம் பெற்றன என்று நாம் உறுதியாக கூறலாம்.

கௌதம புத்தர்

கௌதம புத்தர்


"ஆசையே" துன்பத்திற்கு அடிப்படைக் காரணம் என்னும் தத்துவத்தை உலகிற்கு போதித்தவர் கௌதம புத்தர். உலக மகா ஞானிகளில் தனக்கென தனி இடம் பிடித்தவர். பௌத்த மதம் என்னும் சமயத்தை தோற்றுவித்து மக்கள் யாவரும் முக்தி அடைய ஒரு எளிதான வழியைக் காட்டியவர். புத்தரின் போதனைகளைப் பின்பற்றுவோர் பௌத்தர்கள் என்று அழைக்கப்படுகின்றனர். அந்த மதத்தைச் சேர்ந்தவர்கள் மட்டுமல்லாது அனைவருமே கௌதம புத்தர் அவதரித்த நாளைக் கொண்டாடுகின்றனர். இந்த ஆண்டு மே 23-ம் தேதி (திங்கட்கிழமை - 23.05.2005) அன்று புத்த பூர்ணிமா கொண்டாடப்படுகிறது புத்தரின்

பிறப்பு :

கபிலவஸ்து அருகிலுள்ள லும்பினிக் கிராமத்தில் கி.மு. 566-ல் சாக்கிய குலத்தில் பிறந்தார் கௌதம புத்தர். பெற்றோர் அவருக்கு சித்தார்த்தர் என்று பெயரிட்டு அழைத்தனர். அவருடைய தந்தை சுத்தோதனர். தாயார் மாயாதேவி. சாக்கிய குலத்தைச் சேர்ந்த சுத்தோதனர், கபிலவஸ்துவைத் தலைநகரமாகக் கொண்ட சாக்கிய நாட்டின் மன்னராவார். கபிலவஸ்து நேபாளத்தின் எல்லையில் அமைந்துள்ளது. புத்தர் பிறப்பிடம் அசோக மௌரியர் எழுப்பிய ரும்மிந்தைத் தூண் சின்னத்தால் பிரசித்திப் பெற்று விளங்குகிறது. புத்தர் பிறந்த ஏழாவது நாளில் சுத்தோதனர் இயற்கை எய்தினார். பின்னர் புத்தர் தன் அத்தையான பிரஜூபதி கௌதமியால் வளர்க்கப்பட்டார். இளமைப் பருவத்தில் யசோதரா என்னும் மங்கையை மணந்து இல்லற வாழ்க்கையை நடத்தினார். இவருக்கு ராகுல் என்ற மகன் பிறந்தான். சில காலங்களுக்கு பிறகு புத்தருக்கு அரண்மனை வாழ்க்கை பிடிக்கவில்லை. அமைதியை இழந்தார். இவ்வுலக வாழ்க்கையில் கண்ணுற்ற துன்பங்களைப் பற்றி ஆராயத் தொடங்கினார். ஒரு நாள் இவர் வெளியே சென்றுக் கொண்டிருந்தபோது கண்ட காட்சிகள் இவர் மனதை வெகுவாக புண்படுத்தின. வயது முதிர்ந்த ஒரு மனிதரையும், நோயாளி ஒருவரையும், பிணம் ஒன்றையும், துறவி ஒருவரையும் கண்டார். இதனால் மனம் கலங்கினார். இதற்கு முன்னால் இது போன்ற காட்சிகளையும் இவர் நேரில் கண்டதில்லை. ஆகையால் இத்தகைய காட்சிகள் இவரது சிந்தனைகளை வெகுவாகத் தாக்கியது.

துறவறம் :

உலக வாழ்க்கையில் காணப்படும் துன்பங்களைப் பற்றியும், அதற்குப் பின்னர் என்ன நடைபெறும் என்பது பற்றியும் தீவிரமாக ஆராயத் தொடங்கினார். இத்தகைய துன்பங்களுக்கு நிவாரணம் காண வேண்டும் என்பதே தனது லட்சியமாகக் கொண்டார். எனவே இல்லற வாழ்க்கையை துறக்க தீர்மானித்தார். தனது 29-வது வயதில் கடும் துறவறத்தை புத்தர் மேற்கொண்டார். உண்மையைக் காண்பதே தனது முதன்மையான பணி எனக் கருதி, எல்லாவற்றையும் களைந்துவிட்டு அலைந்து திரியும் துறவியின் வாழ்க்கையை மனம் உவந்து மேற்கொண்டார். துறவிக்கோலம் பூண்ட புத்தர், வாழ்க்கையைப் பற்றியும் மரணத்திற்குப் பின்னர் நடைபெறுவது பற்றியும் அறிய விரும்பினார். இதற்காக இவர் முதலில் வைசாலியில் தங்கியிருந்த அலாரர் என்பவரிடம் பாடங்களைக் கேட்டறிந்தார். பின்னர் இராஜகிரகத்தில தங்கியிருந்த ஆசிரியரான உருத்திரிகா என்பவரிடம் சீடராக அமர்ந்தார். அவருடைய போதனை புத்தரை வெகுவாக கவரவில்லை. எனவே அவரை விட்டு விலகிச் சென்றார். பின்னர் கௌதமர் உருவேலா என்னும் இடத்தில் உணவு இன்றி கடும் தவம் மேற்கொண்டார். சுமார் 6 ஆண்டுகள் இவ்வாறு கழிந்தது. எனினும் தமது லட்சியத்தை அடைவதற்கு இது பயனற்றது என அறிந்தார்.

ஞானோதயம் :

பிறகு நைரஞ்சனா ஆற்று கால்வாயொன்றில் புனித நீராடி இக்கால போத்-கயா என்னுமிடத்திலுள்ள பிப்பல் அல்லது அரச மரத்தடியில் அமர்ந்தார். இறுதியில் அங்கு அவருக்கு உயர்வான ஞானம் புத்தொளி தோன்றியது. தனது 36-வது வயதில் ஞானோதயம் பெற்று நிர்வாணத்தை அடைந்தார். அன்று முதல் இவர் "புத்தர்" அல்லது ஒளிபெற்றவர் என்றும் "ததாகதர்" (உண்மையை அறிந்தவர்) என்றும், சாக்கியமுனி அல்லது சாக்கிய வம்சத்து முனிவர் என்றும் பல பெயர்கள் சொல்லி அழைக்கப்பட்டார். "புத்தன்" என்ற சொல்லுக்கு "விழித்தெழுந்தவன்", "ஒளியினைக் கண்டவன்" என்று பொருள். தன் ஆசையையும், அகந்தையையும் வெற்றி கொண்டார். "தான்", "தனது" என்ற நிலையிலிருந்து விலகினார். இதையே "நிர்வாணம்" அல்லது "நிர்வாண நிலை" என்று சொல்லுவார்கள்.

கொள்கைகள் :

ஒளி பெற்ற புத்தர், வாரனாசியின் அருகாமையிலுள்ள சாரநாத் என்னுமிடத்திலுள்ள "மான் பூங்கா" என்னுமிடத்தில் தன் கொள்கையை போதிக்கத் தொடங்கினார். 45 ஆண்டுகள் அயோத்தி, பீகார், அதையடுத்த பகுதிகளின் மக்களுக்கும், மன்னருக்கும் தாம் கண்ட பேருண்மையை ஊர் ஊராகச் சென்று பரப்பினார். இராஜகிரகத்தில் இரண்டாவது, மூன்றாவது, நான்காவது போதனைகளை நடத்தி வெற்றிகண்டார். கபிலவஸ்துவில் ராகுல், மகா பிரஜாபதி ஆகியோரை தன் சமயத்தில் சேர்த்துக் கொண்டார். மகத மன்னர்களான பிம்பிசாரர், அஜாதசத்துரு ஆகியோர்களை பௌத்த சமயத்தை தழுவும்படி செய்தார். கோசல நாட்டிற்கும் சென்று பலரை பௌத்தத்தை தழுவிட வழிகோலினார். இந்த இடங்களிலெல்லாம் அவரது நான்கு உண்மைகளையும், "நான்கு அதிசய சத்தியங்களையும்", "எண் வகை வழிகளையும்" கூறினார். பிறகு தனது 80-வது வயதில், குசி நகரத்தில் கி.மு. 486-ல் உயிர் நீத்தார். கி.மு. 3-ம் நூற்றாண்டு வட இந்தியா, கிழக்கிந்தியா, ஸ்ரீலங்கா ஆகிய இடங்களில் புத்த மதம் பரவி இருந்தது. கி.பி. முதலாம் நூற்றாண்டில் புத்தமதம் கிழக்கு நாடுகளுக்கு பரவியது. கி.பி. 7-ம் நூற்றாண்டில் திபெத்திற்குச் சென்றது.

புத்தரின் போதனைகள் :

புத்த சமயக் கொள்கைகளைச் சுத்த பிதகம் கூறுகின்றது. மனத் துயரிலிருந்தும், துன்பங்களிலிருந்தும் விடுபடுவதே பௌத்த சமயத்தின் முக்கிய நோக்கமாகும். தன்னலம் துன்பங்களுக்கெல்லாம் காரணமாக இருக்கிறது. ஆசையை ஒழித்தால் தான் மன அமைதியும், ஆனந்தமும் அடைய முடியும். தீமைகளை தவிர்த்து நன்மைகளைச் செய்து வந்தால் ஆசை அகன்றுவிடும். "நான்கு உயரிய உண்மைகளும்", "எண் வகை வழிகளும்" பிறவி என்பது ஒருவரது செயலினால் ஏற்படும் பயன் என்ற கோட்பாடும் தத்துவ இயலுக்கு புத்தர் ஆற்றிய அரிய தொண்டாகும்.

நான்கு உண்மைகள் :

1. துன்பம் : இவ்வுலக வாழ்க்கை துன்பகரமானது. ஏழ்மை, நோய், மூப்பு, இறப்பு முதலியவை நிறைந்த உலக வாழ்க்கை, எளிதில் விலக்கிக் கொள்ள முடியாத துன்பம் நிறைந்தது. இவை நம்மை தொடர்ந்து கொண்டிருக்கின்றன. 2. அதன் தோற்றம் : சிற்றின்ப ஆசையே துன்பத்தின் காரணம். தான் இன்பமாக வாழ வேண்டும் என்ற தன்னலம் கலந்த ஆசையே துன்பங்களுக்கு காரணமாகும். 3. அதை ஒழித்தல் : ஆசை ஒழிக்கப்பட்டாலொழிய துன்பத்தை ஒழிக்க முடியாது. 4. அட்டசீலம் : (எண்வகை வழி) துன்பத்தை ஒழிக்கும் வழி இதுவேயாகும். எண்வகை வழிமுறைகளை கடைபிடித்தால் ஆசைகளை ஒழித்துவிடலாம். நடுவு நிலை வழி, இடை வழி : புத்தர் கூறிய சமய முறையில் ஆசையை அறவே ஒழித்து, பல்வகையான வாழ்க்கையின் மீது நாட்டம் கொள்ளாமல், வாழ்க்கையில் ஆசையால் விளையும் துன்பங்களை ஒழிப்பதே நிர்வாணமாகும். இடைவழி : ஆழ்ந்த அறிவு, விவேகம், புலமை, அமைதி, நிர்வாணம் ஆகியவற்றை அடையச் செய்கின்றன. இடைவழியில் எட்டு கொள்கைகள் உள்ளன. இதற்கு "அட்ட சீலம" அல்லது "எண் வகை வழிகள்" என்று பெயர். அட்டசீலம் அல்லது எண்வகை வழிகள் : 1. நல்ல நம்பிக்கை : நான்கு உண்மைகளில் நம்பிக்கைக் கொள்ளுதல். 2. நல்லெண்ணம் : இல்லற வாழ்க்கையை விட்டொழிக்கவும், சினத்தை அகற்றவும், ஒருவருக்கும் தீமை செய்யாமலிருக்கவும் தீர்மானித்தல். 3. நல்வாய்மை அல்லது நல்லமொழி : பயனற்றதும், கடுமையானதும் பொய்யானதுமான சொற்களை கூறாதிருத்தல். 4. நற்செய்கை : பிறரை துன்புறுத்தாமலும் (அகிம்சை) களவாடாமலும் நன்னெறி தவறாமல் இருத்தல். 5. நல்வாழ்க்கை : பிச்சை எடுத்து வாழ்தல். 6. நன் முயற்சி : தீமையை அகற்றி நற்குணங்களை வளர்த்தல். 7. நற்சாட்சி : சிற்றின்ப ஆசையையும், துன்பத்தையும் அடையாவண்ணம் விழிப்புடனிருத்தல். 8. நல்ல தியானம் : லட்சியத்தை (குறிக்கோளை) அடைய மனம் ஒருவழிபட்டு சிந்தித்தல். சுருக்கமாகக் கூறினால், புத்தருடைய அறிவுரைகளில் நம்பிக்கையுடன் அவற்றை அறியவும், அதன்படி நடக்கவும் முயன்று ஒழுக்கம் தவறாத நடத்தையுடன் மனதை ஒருவழிபடுத்தி இறுதியான இன்பத்தை (வீடு, மோட்சம்) அடைய வேண்டுமென்பதாகும். அவரது காலக் கட்டத்தில் இந்திய தத்துவ இயலில் ஆதிக்கம் செலுத்தி வந்த கடவுள், ஆன்மா, மாறாத நிலையான உண்மை அல்லது வஸ்து போன்ற கருத்துகளை அறிவார்த்த முறையில் களைந்து உலகம், வாழ்க்கை, சிந்தனை குறித்த முற்றிலும் மாற்றான கருத்துகளை முதன் முதலில் பறை சாற்றியவர் புத்தர் என்றால் அது மிகையாகாது.